Published : 03,Feb 2019 08:01 AM
கே.எஸ்.அழகிரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எஸ்.அழகிரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.மேலும், தமிழக காங்கிரஸ் செயல்தலைவர்களாக ஹெச்.வசந்தகுமார்,கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எஸ்.அழகிரிக்கும், தமிழக காங்கிரசின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நால்வருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பணியாற்றுவேன்”என்று அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியை வரவேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அவர் மென்மேலும் சிறப்புடன் பணிபுரிய வேண்டுமென வாழ்த்தி, அவருடன் இணைந்து பணியாற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.வசந்த்குமார், எம்.எல்.ஏ., கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.