
பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் ராமாபுரம் அடுத்த அன்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் தனக்கு தன்னுடைய பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கூறியும், சொத்துக்கள் தன்னுடைய பெயருக்கு பெற்றோர்கள் மாற்றவில்லை எனக் கூறியும் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்க சென்றுள்ளார்.
அப்போது ஆட்சியர் அலுவலகம் வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஜானகிராமனை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தியில் ஜானகிராமன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு விசாரணைக்காக சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு ஜானகிராமனை போலீசார் அழைத்து சென்றனர். திருமணம் செய்து வைக்காத காரணத்தினால் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.