Published : 22,Jan 2019 08:17 AM

கோபிநாத் முண்டே மரணத்தை ரா அமைப்பு விசாரிக்க வேண்டும்: மருமகன் வலியுறுத்தல்

Ex-Minister-Gopinath-Munde-s-Nephew-Wants-Probe-After-Expert-s-Claim

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் தொடர்பாக ரா அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என அவரது மருமகன் வலியுறுத்தியுள்ளார்.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா குற்றஞ்சாட்டியிருந்தார். தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது என புகார் தெரிவித்த அவர், இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக் கொண்ட கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார். ஹேக்கிங் குறித்து தெரிந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டார் எனவும் புகார் கூறினார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில் கோபிநாத் மரணம் தொடர்பாக ரா அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரின் மருமகன் தனஞ்செய் முண்டே வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனஞ்செய் முண்டே, கோபிநாத் முண்டே உயிரிழப்பு தொடர்பாக ஏற்கெனவே அவரது தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்த வண்ணம் இருந்தன. தற்போது சைபர் நிணரின் புகாரால் மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளது. இகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு காரில் பின் இருக்கையில் அமர்ந்துசென்றபோது, லாரி மோதி கோபிநாத் முண்டே உயிரிழந்தார். ஆனால் முண்டேயின் கார் ஓட்டுநர் மற்றும் முன்புறம் அமர்ந்திருந்த உதவியாளருக்கு காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து இந்த விபத்து குறித்து சர்ச்கைகளும், சந்தேகங்களும் எழுந்தன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்