[X] Close

சபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது ? ஒரு நேரடி விசிட்

How-Sabarimala-Pampa-river-and-Ayyappa-Shrine-looks-now---a-Live-study

சபரிமலை ஐயப்பன் கோவலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டலப் பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை ஆகியவை மிகுந்த பரபரப்புக்கு நேற்று முடிவடைந்து, ஐயப்பனின் நடையும் அடைக்கப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது.

இதன் காரணமாக ஐப்பசி மாதம் தொடங்கி தை மாதம் வரை பல்வேறு பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சித்தனர். அதில் பலர் தோல்வியும், சிலர் வெற்றியுமே பெற்றனர். இந்தச் செய்திகளை ஊடகங்களில் காணும் பலர் சபரிமலை ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எண்ணுவார்கள். ஆனால், அண்மையில் சபரிமலை சென்றபோது அப்படியான பதற்றமான சூழ்நிலையின்றி மிகவும் அமைதியாகவே இருந்தது. 


Advertisement

ஏன் நிலக்கல்லில் நிறுத்தம் !

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் இந்தாண்டு பம்பா செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. இதனால் பம்பாவில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கும் நிலக்கல்லில் கார் முதல் அரசுப் பேருந்துகள் வரை அனைத்தும் நிறுத்தப்பட்டது. கேரள அரசு பஸ்கள் மட்டுமே பம்பா வரை இயக்கப்படுகிறது. பம்பையில் இருந்து பக்தர்கள் பம்பா செல்ல கேரள அரசுப் பேருந்தில் ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


Advertisement

Image result for nilakkal parking

இதே ஏசி பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால், சாதாரண பஸ்களை விட ஏசி பஸ்களே அதிகம் இயக்கப்படுவதால் 18 கி.மீ. தூரத்துக்கு ரூ.75 டிக்கெட் விலை மிகவும் அதிகம் என பக்தர்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு சொந்த வாகனங்களில் சென்றாலே செலவு மிச்சம் என கருதுகின்றனர். ஆனால் பம்பாவில் வாகனங்களை நிறுத்தக் கூடிய அளவில் இடம் இருக்கிறதா ? எப்படி இருக்கிறது பம்பா ?

பம்பாவின் பரிதாப நிலை !

பம்பா ஆற்றங்கரையில் சக்குபள்ளம் 1, சக்குபள்ளம் 2, பம்பா, ஹில்டாப், திரிவேணி சங்கமம், சாலக்காயம் என்று வாகன நிறுத்துமிடங்கள் பிரித்து வைக்கப்பட்டு கார்கள், வேன்கள் என முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐயப்ப பக்தர்களின் புனித ஆறாக கருத்தப்படும் பம்பாவின் நிலை இப்போது மிகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது. கேரள பெரு வெள்ளத்துக்கு பின்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது பம்பா ஆற்றின் கரையோரங்கள். பெரு வெள்ளம் திரளாக கொண்டு வந்த மணல்கள் பம்பை ஆற்றை முற்றிலுமாக அடைத்து, அகன்று விரிந்திருந்த நதி பாதியாக குறைத்துள்ளது.

பம்பை படித்துறைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், வெறும் மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது புனித பம்பா. பம்பை ஆற்றின் சுற்றுச்சுவர்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டதால், மணல் மூட்டைகளை கொண்டு தாற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் குதூகளித்து ஓடும் பம்பை, இப்போது குளத்து நீர் போல அமைதியாக இருக்கிறது. பம்பையின் இப்போதைய நிலையை கண்டு கண்ணீர் சிந்தினார் 50 ஆண்டுகளாக சபரிமலைக்கு வந்துள்ள சென்னையைச் சேர்ந்த ஆனந்தன் குருசாமி.

எல்லாம் விலை அதிகம் !

பஸ் டிக்கெட் முதல் பிரசாதம் வரை கடுமையாக விலையை உயர்த்தப்பட்டுள்ளது. பிரசித்திப் பெற்ற அரவணப் பிரசாதத்தின் விலை ரூ.80 ஆக நிர்ணயித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பம்பா முதல் சன்னிதானம் வரை இருக்கும் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலை மிக அதிகம். இரண்டு சப்பாத்திகளை ரூபாய் 80-க்கு விற்கிறார்கள். அதிலும் உணவின் தரம் மகா மட்டம்.

இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் "பெண்களை அனுமதிப்பதில் அக்கறை காட்டிய கேரள அரசு. பம்பையை மேம்படுத்துவதிலும், பக்தர்களுக்கான வசதியை முறையாக செய்வதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். பம்பையில் எப்போதும் நீராடும் பலர் இம்முறை நிலக்கல்லிலோ அல்லது பம்பையில் இருக்கும் குளியலறைகளிலும் குளிக்கின்றனர். அந்தளவுக்கு பம்பா நதியின் நிலை மோசமாக இருக்கிறது" என வேதனை தெரிவித்தார்.

இது குறித்து திருவாங்கூர் தேவஸம் போர்டு அதிகாரி கிருஷ்ணன் கூறும்போது " கேரள வெள்ளம் நாங்கள் எதிர்பார்காத சேதத்தை ஏற்படுத்திவிட்டது. பம்பாவை சீர் செய்ய கேரள அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. மகர விளக்கு சீசன் முடிந்த பின்பு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நிச்சயம் இந்தாண்டு மண்டலப் பூஜைக்குள்ளாக, பம்பா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சரி செய்யப்படும். பக்தர்களின் அடிப்படை வசதியும் மேம்படுத்தப்படும். இனி பக்தர்களின் கூட்டம் குறையும் என்பதால் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதாக இருக்கும்" என்று உறுதியளித்தார்.

சபரிமலைக்கு ஜனவரி 16 ஆம் தேதி காலை சென்று இருந்தேன். மகர ஜோதி முடிந்து இரண்டாவது நாள். சன்னிதானத்துக்கு முன்பான நடைப்பந்தலில் வரிசையில் கூட நிற்காமல் செல்லக் கூடிய அளவுக்குதான் கூட்டம் இருந்தது, அப்போது அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் வரும் பக்தர்களுக்கு பிஸ்கட்டும், மிதமான சூட்டில் மூலிகை தண்ணீரையும் கொடுத்தார்கள் அப்போது பேசிய அவர் "பொறுமையாக செல்லுங்கள் பக்தர்களே, முன்பெல்லாம் ஐயப்பனை காண்பதற்கு நாம் ஓட வேண்டும். இப்போது அவர் பக்தர்களான உங்களை காண யோகப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார், நிதானமாக செல்லுங்கள்" என கூறினார். ஆம், இவ்வளவு பிரச்னைகளிலும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் இன்னும் பேரமைதி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. 
 


Advertisement

Advertisement
[X] Close