Published : 20,Jan 2019 02:08 AM

சென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்

Technology-Hour-Cycle-project---Corporation-introduced-in-Chennai

மக்களின் போக்குவரத்து பிரச்னைகளை சரி செய்ய, நவீன வாடகை சைக்கிள் திட்டத்தை சென்னை மாநகராட்சி கொண்டு வரவுள்ளது. 

சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக நவீன வாடகை சைக்கிள் என்ற திட்டம் ஸ்மார்ட் பைக் என்ற நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த நிறுவனத்தின் சைக்கிள்கள் நேர்த்தியான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதி என கண்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இந்நிறுவனம், எந்நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையின் போக்குவரத்துக்கான தேவையை அறிந்து, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வாடகை சைக்கிள் திட்டத்தை கொண்டு வர உள்ளது. 

நேரம் வீணாவதைத் தடுக்கவும், மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பிப்ரவரி மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னையில் செண்ட்ரல், மெரினா, பெசன்ட்நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 375 சைக்கிள் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ஸ்மார்ட் ஆப் என்ற செயலியை உங்களின் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு, நீங்கள் இந்த சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். 

நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், வாடகைக்கு எடுக்கப்படும் சைக்கிள்களின் இயக்கங்களை எளிதாக கண்காணிக்க முடியும். அதற்காக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டடத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 5 ஆயிரம் வாடகை சைக்கிள்களை இயக்க ஸ்மாட் பைக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் என்ற சொற்ப கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இத்திட்டத்தை மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்