Published : 15,Jan 2019 02:02 AM
சீறிப் பாய்ந்த காளைகள் - களைகட்டிய தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் அரசின் அனுமதியோடு, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் அமைக்கப்பட்டிருந்த திடலில் காலை முதலே காளைகள், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் திரண்டனர். அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிமொழி வாசித்து, கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
வாடிவாசல் வழியாக முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப் பாய்ந்தன. களத்தில் தயாராக இருந்த காளையர், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் காளைகளைப் பிடித்தனர். ஏராளமான காளைகள் திமிலை நிமிர்த்திக் கொண்டு வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடி பாய்ந்த காட்சி, அனைவரையும் வியப்படையச் செய்தது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பார்வையாளர்கள் கண்டு வியந்தனர். மேலும், திடல் பகுதியில் இருந்த கட்டடங்களின் மேற்பகுதியில் நின்றவாறும், களத்தில் காளைகளுக்கும், காளையருக்கும் நடந்த மல்லுக்கட்டை கிராம மக்கள் பார்த்தனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 453 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 120 மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் வீரர்கள் 13 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் பரிசுகள் வழங்காதபோதும் வீரர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் ஒரே நோக்கில், ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பாசத்தையும், வீரத்தையும் கொண்ட ஜல்லிக்கட்டு என்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் என மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.