Published : 14,Jan 2019 03:55 AM
காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி

காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பின் மூத்த நீதிபதியாக இருப்பவர் சிக்ரி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு சிக்ரி பெயரை பரிந்துரை செய்ய மத்திய அரசு கேட்ட நிலையில் அதற்கு சிக்ரி சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அப்பதவியில் இருந்து மாற்றுவதற்காகச் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலை தேர்வுக்குழுவில் சிக்ரியும் இடம்பெற்றிருந்தார். அத்துடன், அலோக் வர்மாவை இடமாற்றம் செய்ய சிக்ரியும் சம்மதம் தெரிவித்தார். காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கு நியமனம் செய்ததால் தான், அலோக் வர்மா நீக்கத்துக்கு ஆதரவாக சிக்ரி செயல்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கான வாய்ப்பை சிக்ரி நிராகரித்து விட்டார். அலோக் வர்மா நீக்கம், காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கான நியமனம் ஆகிய இரு நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி பேசுவது மன வருத்தத்தை அளிப்பதாக ஏ.கே.சிக்ரி கூறியுள்ளார்.