[X] Close

“ஒருபோதும் பாஜக உடன் கூட்டணி இல்லை” - ஸ்டாலின் திட்டவட்டம்

Never-Alliance-with-BJP--MK-Stalin

தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது தமிழகத்தில் அதிமுக, ரஜினியுடன் கூட்டணியா..? அல்லது திமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


Advertisement

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும், பழைய நண்பர்களையும் வரவேற்க பாஜக தயாராக உள்ளது எனக் கூறினார். அத்துடன் வெற்றிகரமான கூட்டணி அரசியலை 20 ஆண்டுகளுக்கு முன்னரே சாத்தியப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்றும், அவரது பாதையில் பாஜக செயல்படுமென்றும் கூறினார்.

அப்படியென்றால் வாஜ்பாய் காலத்தில் பாஜக தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டு பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதனை மனதில் கொண்டு பழைய நண்பர்கள் என்ற முறையில் திமுக, அதிமுகவிற்கு பாஜக மறைமுகமாக அழைப்பு விடுக்கிறதா..? என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தன்னை, வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளதாக கூறியுள்ளார். இது வழக்கம்போல் அவரது பிரச்சார உத்தியாகவே இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாட்டை பிளவுபடுத்தும் எந்தத் திட்டத்தையும் முன்வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்ததாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆரோக்கியமான கூட்டணி அல்ல என்றும், இவரது ஆட்சியில் தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற மனப்பான்மையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பிரதமர் மோடி செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என ஆணித்தரமாக விளக்குவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close