[X] Close

ரொமான்ஸ் காட்சிகளால் நிரம்பி வழியும் ‘வர்மா’ ட்ரெய்லர்  

bala-s-varma-trailer-review-on-puthiya-thalaimurai

நடிகர் துருவ் நடித்துள்ள ‘வர்மா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 


Advertisement

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘வர்மா’. இந்தப் படத்தின் மூலம் துருவ் முதன்முறையாக திரைத்துறையில் புதுமுக நடிகராக அறிமுகமாக இருக்கிறார். 


Advertisement

இந்தப் படம் 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’யின் ரீமேக் ஆகும். தெலுங்கில் விஜய் தேவேரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகவும் பேசப்பட்டது. ஆகவே அதனை தமிழில் எடுக்க முடிவு செய்தார் இயக்குநர் பாலா. அவர் எடுக்கும் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தச் செய்தியை விக்ரம் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக சில மாதம் முன்பு அறிவித்திருந்தார்.

அதனையடுத்து பெங்காலைச் சேர்ந்த மாடல் மேகா துருவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த வாய்ப்பு குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்த மேகா, “நான் அடிப்படையாக கதக் நடனக் கலைஞர். பாலாவின் படத்திற்காக கதக் தெரிந்த நடிகையை தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேடலில் நான் அவர்கள் முன் நின்றேன். எப்படி இது நடந்தது என்றே தெரியவில்லை. பாலா படத்திலா? நானா? நம்பவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் கதக் கலைக்குதான் நான் நன்றி கூற வேண்டும்” என்று கூறியிருந்தார்.


Advertisement

இதனையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் துருவ், தாடியும் மீசையுமாக பைக்கில் வலம் வருவதைபோல காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த போஸ்டரை கண்ட திரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்புகளை பதிவிட்டனர். ஆனால் ஒரு தரப்பு போஸ்டர் மிகச் சிறப்பாக இருப்பதாக கூறியது.

இந்நிலையில் ‘வர்மா’ படத்தின் ட்ரெய்லர் இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் நடிகர் துருவ் மிகவும் ஹேண்ட்ஸமாக இருக்கிறார். அதேபோல ட்ரெய்லர் முழுவதும் துருவின் காட்சிகளாக நிரம்பி வழிகின்றன. சட்டையைக் கழற்றியபடி எண்ட்ரி கொடுக்கும் துருவின் காட்சியுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அதன் பிறகு ‘புன்னகை ஒன்றே போதுமே’ பாடல் ட்ரெய்லர் பின்புலமாக ஒலித்தபடியே நகர்கின்றன காட்சிகள். மேகா, துருவ் ஜோடி ட்ரெய்லரில் மிக இயற்கையாக பொருந்தி வந்துள்ளனர்.  

ஆக்‌ஷன், ரொமான்ஸ் என்ற எல்லா காட்சிகளிலும் துருவின் நடிப்பு தேர்ந்து காணப்படுகிறது. அவர் வரும் காட்சிகள் முழுக்க அப்பா விக்ரமின் சாயலில் தென்படுகிறார் என்பதை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும். ஒரு ஆணழகனை போல துருவ் ட்ரெய்லர் முழுக்க நிரப்பி இருக்கிறார். தாடியுடனும், தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் உடனும் துருவ் பல பரிமாணங்களில் தோன்றி மறைகிறார். அந்தக் காட்சிகள் முழுவதும் மிகச் சிறப்பாக வந்துள்ளன.  

மாதவனுக்கு அடுத்ததாக இனிமேல் துருவ் சாக்லெட் பாய் இடத்தை நிரப்புவார் என்றே தெரிகிறது. அதேபோல ஒரு அறிமுக நடிகர் என்று கூற முடியாத அளவுக்கு அழுத்தமாக திரையில் தெரிகிறார் துருவ். இந்த ட்ரெய்லர் வெளியான சற்று நேரத்திற்குள் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

ட்ரெய்லரில் ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டராக நுழையும் துருவ் செம கூலாக வந்து அறுவைச் சிகிச்சைக்கு படுத்திருக்கும் நோயாளியிடம், “சலாம் அலைக்கும்” என்கிறார். அந்தநேரத்தில் அவருக்கு பதில் கொடுக்கிறார் நோயாளி. இந்தக் காட்சியில் துருவின் முகபாவம் மிக நேர்த்தி ரகம் என்றே கூற வேண்டும். ஆக, தமிழ் சினிமாவிற்கு ஒரு அஃமார்க் ரொமாண்டிக் ஹீரோவாக துருவை முன்வைத்துள்ளது ‘வர்மா’ ட்ரெய்லர். இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. இந்தப் படம்  ஒளிப்பதிவிலும் சரி, ஒளி அமைப்பிலும் சரி வழக்கமான பாலா ரகம் இல்லை.


Advertisement

Advertisement
[X] Close