“உயர்மட்ட வகுப்பினருக்கா இந்த 10% இட ஒதுக்கீடு?” - வல்லுநர்கள் அலசல்

“உயர்மட்ட வகுப்பினருக்கா இந்த 10% இட ஒதுக்கீடு?” - வல்லுநர்கள் அலசல்
“உயர்மட்ட வகுப்பினருக்கா இந்த 10% இட ஒதுக்கீடு?” - வல்லுநர்கள் அலசல்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இ‌டஒதுக்கீடு நடைமுறையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்‌டத்தில் முடிவு‌ எடுக்கப்பட்டது. இதில் இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பினால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் உள்ளது. 

எனவே ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்க வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவும் செய்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இடஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “இந்த இடஒதுக்கீடு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக செய்யும் கடைசி கட்ட முயற்சி” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், ''இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டதல்ல; அது சமூக பாகுபாடுகளுடன் தொடர்புடையது. இதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகள் தமது தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது. எனவே பொருளாதார ரீதியிலான இந்தச் சட்ட திருத்தம், அரசியலமைப்பு சட்டத்துக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது.
எனவே நீதிமன்றத்தில் இது தள்ளுபடி ஆகிவிடும்.

இது பாஜகவினருக்கும் தெரியும். வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்குவதற்காக பாஜக செய்யும் கடைசிகட்ட முயற்சியாகவே இதைப் பார்க்க தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்போம் என்பது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் காரியம். இது தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்கப்பார்ப்பதே ஆகும்” என்று அவர்தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களுக்காக கொண்டுவரப்பட்டது அல்ல என்று பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ''பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்ற வேண்டுமென்றால் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். படித்து முன்னேற வசதி இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது எதற்கு என்றால் அதிகாரம் என்ற ஒரு அமைப்பு உருவாகும் போது சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் அதில் பங்கு கிடைக்காது. அதற்கு காரணம் நம்முடைய சமுதாய அமைப்பு. அனைவரும் சமம் என்ற சமுதாய அமைப்பு நம்மிடம் இல்லை. 

நெடுங்காலமாக ஏற்றத்தாழ்வுடன் நமது சமுதாயம் இருக்கிறது. அப்படி இருக்க மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள். கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித பிரதிநிதித்துவமும் இருக்காது, அவர்களுக்காக கொண்டுவரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. எனவே இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடாது என உச்சநீதிமன்றம் முன்பே கூறியுள்ளது. கொண்டு வந்தால் அது செல்லாது என்றும் தெரிவித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com