Published : 04,Jan 2019 03:02 PM
சிறுமியை விலைக்கு வாங்கி சித்ரவதை செய்த குடும்பத்தினர் கைது

ரூ.2 லட்சத்துக்கு 15வயது சிறுமியை விலைக்கு வாங்கி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்
ஹரியானாவில் 15வயது சிறுமி ஒருவர் முதல்மாடியில் இருந்து குதித்து காயங்களுடன் ஓடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியை தேடி கண்டிபிடித்தனர். சிறுமியை விசாரிக்கும் பொழுது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் வாக்குமூலம் அளித்த சிறுமி, “என்னை இரண்டு மாதத்துக்கு முன்பு உறவினர் வீட்டுக்கு அழைத்து வருவதாக்கூறி தன்னுடைய மாமா ரயிலில் பிவானிக்கு அழைத்து வந்தார். ஆனால் சந்தீப் என்பவருக்கு என்னை ரூ,2லட்சத்துக்கு விற்றுவிட்டார். என்னை வற்புறுத்தி திருமணம் செய்துகொள்ள சந்தீப்பின் குடும்பத்தினர் மிரட்டினர். என்னை அவர்கள் வீட்டுச்சிறையில் அடைத்து வைத்தனர். அதனால் தான் தப்பித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து சந்தீப்பையும் அவரது தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர், பெண்ணின் வயதை சரியாக குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மருத்துவ முறையில் பெண்ணின் எலும்பில் சோதனை செய்து வயதை அறிய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.