Published : 04,Jan 2019 09:00 AM
எச்.ஐ.வி விவகாரம் : தகுதி இல்லாதவர்களை நியமித்தது ஏன்? - உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் உரிய தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்தர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் எய்ட்ஸ் பரவுதல், தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள் வேண்டும். இதற்காக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பணிகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சரியாக மேற்கொள்வதில்லை. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி சிறுமிகள் இரண்டு பேருக்கு எச்ஐவி இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கையிலும் ஒரு சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது. தற்போது சாத்தூரில் ஒரு கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ரத்த வங்கிகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. மேலும் தமிழகத்தில் பல அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. இந்த வங்கிகளில் உரிய கல்வி தகுதி இல்லாத பணியாளர்கள் உள்ளனர். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 2014 - 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் இதுபோல் 89 பேருக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் உரிமம் இல்லாத ரத்தவங்கிகளை அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் உரிய தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து உரிய விளக்கத்தை அரசிடம் கேட்டு பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.