[X] Close

மனிதனுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் வந்துவிட்டது 'ஸ்ட்ரெஸ்'

Elephant-in-forest-suffering-from-depression-caused-by-human

இப்போதெல்லாம் யானை - மனிதன் மோதல் அதிகரித்துவிட்டது. ஊருக்குள் புகும் யானைகளால் மக்களுக்கு ஆபத்து என்ற செய்தியுடன் இவ்விவகாரத்தை கடந்து சென்று விடுகிறோம். யானைகள் வழித்தடத்தில் நாம் வீட்டை கட்டினால் யானைகள் அங்கு வராமல் வேறு எங்கு செல்லும் என்பதை நாம் யோசிப்பதில்லை. அதற்கு பொது மக்களை மட்டுமே குறை சொல்வதும் நியாயமில்லை. இதனை அரசுதான் தீர்க்க வேண்டும், யானைகளின் வழித்தட பாதைகள் முறையாக வரையறுக்க வேண்டும் என்கிற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சனையில் ஒரு மிகப்பெரிய விலங்கான யானையின் குணாதிசயமே மாறியுள்ளதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆமாம், இப்போது மனிதர்களை போல யானைகளுக்கும் "ஸ்ட்ரெஸ்", அதாவது மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


Advertisement

மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதனை தீர்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே மனிதனால்தான் என்பதை ஏற்றுக்கொள்ள சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் கசப்பான உண்மை. அதவும் சாதாரண மன உளைச்சல் அல்ல கடும் கோவத்தில் இருக்கும் மிகத் தீவிரமான மன உளைச்சலில் இருப்பதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் அதிர வைக்கின்றனர். இதனால்தான் மனிதன் தனக்கு எந்த தீங்கும் செய்யாமல் இருந்தால் கூட, மனிதனை கண்டவுடன் இப்போதெல்லாம் துரத்த ஆரம்பித்து இருக்கிறது.


Advertisement

20 ஆண்டுகளில் மாற்றம் ! 

யானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர். அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை. முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன என கவலை தெரிவிக்கிறார் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளரான அனந்த குமார். 


Advertisement

வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன. ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. 

மனிதனை எதிரியாக பார்க்கும் யானை !

இது குறித்து மேலும் விவரிக்கிறார் கோவையைச் சேர்ந்த சூழலியலாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி " யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன. அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்த நிமிஷத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட" என தெரிவிக்கிறார் அவர். 

ஜீப்பை கண்டால் பிடிக்காது !

முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன. ஜீப்பின் சத்தமும், மனிதனின் கூச்சலும், கும்மாளமும் அவற்றுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. மசினக்குடி வனப் பகுதியில் இருக்கும் யானைகளுக்குத் தனியார் ஜீப்புகளைக் கண்டால் ஆகாது. இந்தத் தனியார் வாகன ஓட்டிகள், பயணிகளைக் குஷிப்படுத்தும் நோக்கில் கூட்டமாக இருக்கும் யானைகள் அருகே சென்று ஒலி எழுப்புவது, பின்புறமாக இடிப்பது போன்ற சீண்டல்களில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.  

இதை முன்பெல்லாம் சகித்துக்கொண்ட யானைகள், இப்போதெல்லாம் ஜீப்பைக் கண்டால் துரத்த ஆரம்பிக்கின்றன. இதே போல, 2013-ஆம் ஆண்டு கோலின் மானல் என்ற 67 வயது இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தனியார் ஜீப்பில் சுற்றுலாச் சென்றார்.  அப்போது, எதிரே வந்த ஒற்றை யானையைக் கண்டவுடன் வாகனம் ஓட்டி வந்த நபர் ஓடிவிட்டார். யானையைப் புகைப்படம் எடுத்த அந்த இங்கிலாந்து பயணியை அந்த ஒற்றை யானை கொன்றது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.  


Advertisement

Advertisement
[X] Close