Published : 02,Jan 2019 08:01 AM
குடிநீர்கூட கிடைக்காமல் தவிக்கும் அலக்கட்டு மலைக்கிராமம்

குடிநீர்கூட கிடைக்காமல் தவித்து வரும் அலக்கட்டு மலைக்கிராம மக்கள், தங்களின் சிரமத்தை அரசு புரிந்து கொண்டு உடனே உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அலக்கட்டு மலைகிராம். அடர்ந்த வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் சுமார் எட்டு கிலோ மீட்டர் கரடுமுரடான பாதையைக் கடந்தால்தான் அலக்கட்டு மலைகிராமத்தை அடைய முடியும். சுமார் 40 குடும்பங்கள் வசித்து வரும் இந்தக் கிராமம் வானம் பார்த்த பூமி.மானாவாரி விவசாயம் மட்டுமே இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது.
பாறைக்களின் இடுக்குகளில் வரும் ஒரு சுனையிலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டே இந்தக் கிராம மக்கள் தங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வந்தனர். அதனை அறிந்த வனத்துறையினர் இவர்களின் தேவைக்காக கிணறு வெட்டி கொடுத்ததோடு ஒரு நீர்த்தேக்க தொட்டியும் கட்டி அதன் உதவியால் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்து தந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மின்மோட்டார் பழுதாகியுள்ளது, இந்த மின்மோட்டரை பழுது பார்க்காமல், காலம் தாழ்த்தியதால் தொடர்ந்து மின் கம்பத்திலிருந்து வரும் மின் கம்பியையும் துண்டித்துள்ளனர். இதனால் மீண்டும் அலக்கட்டு கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று, கிணாற்றிலிருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு இந்த அலக்கட்டு மலைக்கிராம மக்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆகவே கிணற்றுக்கு உடனடியாக மின்மோட்டர் வைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த மலைக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.