[X] Close

“மூன்று லட்சம் அபராதம் போதுமா?”: சர்ச்சையான சக்தி - கவுசல்யா மறுமணம்

Kavusalya-Sakthi-Re-Marriage---Sakthi-Made-Many-Frauds-and-its-proved

அண்மையில் கவுசல்யாவை மறுமணம் செய்துகொண்ட சக்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்த்
தேசிய விடுதலைக்கழகம் விளக்கம் தரும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, அதன்பின்னர் ஆவணக் கொலைக்கு எதிராக குரல் கொடுத்து சமூகப்
பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நிமிர்வு கலையகத்தின் பொறுப்பாளர் சக்தி என்பவரை அவர் மறுமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணம் நடந்து முடிந்த சில மணிநேரங்களிலேயே, சக்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்கள் மூலம்
வைக்கப்பட்டது. 


Advertisement

இந்நிலையில் இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைக்கழக
இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “சக்தி மீது எழுந்த குற்றச்சாற்றுகளும் எதிர்க் கருத்துகளும் வளர்ந்து நிலையில், சக்தி-கவுசல்யா உட்பட பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம். முதன்மைத் துயரர் ஒரு பெண், பெயர் வெளியிட இயலாத நிலையில் அவரை ‘அந்தப் பெண்’ என்று மட்டும் குறிப்பிடுவோம்.

அந்தப் பெண்ணைக் காதலித்து வந்த சக்தி அவரைக் கைவிட்டுப்போய் கவுசல்யாவை மணந்து கொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு.
காதலை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமை உண்டென்றாலும், இந்தக் குறிப்பிட்ட தேர்வில் சக்தி அவரைக் கைவிடுவதும் வேறு
பெண்ணிடம் செல்வதும் பிறகு மீண்டும் வந்து நம்ப வைத்து ஒன்று சேர்வதும், மீண்டும் திரும்பிப் போவதுமாக ஒருமுறைக்கு மேல் 
நடந்திருப்பதும், இந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு உடல் வகையிலும் மனரீதியாகவும் கடுமையான மன உளைச்சல் தந்திருப்பதும்
குற்றம் என்றே கருதுகிறோம்.

சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது
கௌசல்யாவின் பிழையாகும்.  நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற இடத்தைப் பயன்படுத்தி சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதும் இரண்டாவது குற்றச்சாட்டு. இப்படி ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒருமுறை நிமிர்வு கலையகத்திலிருந்து நீக்கப்பட்டுச் சிறிது காலம் கழித்து மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு திருநங்கையும் சக்தி மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார். சக்தி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக வேறு பெண்களைப் பற்றி அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாற்றினை சக்தி ஒப்புக்கொண்டார். கவுசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார். தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க முடிகிறது. சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும். இன்றிலிருந்து ஆறு மாத காலம் சக்தி எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பறையிசைக்கக் கூடாது. இழப்பீடு என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று லட்சம் உருவாய் செலுத்த வேண்டும். முடிவுகளை அறிவித்த பின்னரும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது, முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளில் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அதில், ரூ.3 லட்சம் அபராதம் என்பது போதுமா? இதுதான் பெண்களுக்கு வழங்கப்படும் நீதியா? எனக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் சக்தி தொடர்பாகவும் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர். கவுசல்யாவிற்கு எதிராகவும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆதரவை விட, எதிர்மறை விமர்சனங்கள் மிகுந்த அளவில் உள்ளன. 
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close