Published : 30,Dec 2018 01:04 PM
“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வியக்கத்தகு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு போட்டியில் வென்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வந்தது.
கடைசி நாளான இன்று, இந்திய அணி 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெடும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், இந்தத் தொடரில் 2-1 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த இந்திய அணியையும், சிறப்பாக பந்துவீசிய பும்ராவையும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “வியக்கத்தகு முயற்சியால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக வெற்றிக்கு பும்ரா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பும்ரா வலிமையடைந்து கொண்டே செல்கிறார். உலகின் மிகவும் சிறப்பான வீரர்கள் அவரும் ஒருவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Incredible effort by #TeamIndia to take a 2-1 lead, especially @Jaspritbumrah93 who has played an instrumental role in this win. He has gone from strength to strength in all formats of the game. Definitely one of the best in the world today. #INDvAUSpic.twitter.com/vweoHd0nEE
— Sachin Tendulkar (@sachin_rt) December 30, 2018
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் பும்ரா, இதுவரை 20 விக்கெட் சாய்த்துள்ளார்.