
தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் திரைப்படம் குறித்தான சர்ச்சை குறித்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, நானும் தான் ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்று தெரிவித்தார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அவரது ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு. இவர் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் பிரபல நடிகர் அனுபம் கெர் நடிப்பில் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரிலேயே திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங் பலிகடா ஆக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இந்தப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த டிரெய்லருக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் காங்கிரசுக்கு எதிராக இந்த ட்ரெய்லரை முன் வைத்து பிரச்சாரத்தில் குதித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா, இந்தப்படம் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்னதே தொடங்கியிருக்கும். இதை ஏன் அனுமதித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதில் என்ன ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை. நானும் தான் ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்று தெரிவித்தார்
1996-ல் நாடாளுமன்றத் தேர்தல்களில் முந்தைய ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியுற்றது. அப்போது எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க முடியாதநிலை ஏற்பட்டது. அப்போது காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து புதியதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியப் பிரதமராக தேவ கவுடா பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு ஜூன் 1ல் தேதி பதவியேற்ற அவர், 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமர் பதவியில் இருந்தார்.