[X] Close

‘நாளை முத்தலாக் மசோதா விவாதம்’ - எம்.பிக்கள் ஆஜராக பாஜக அறிவுறுத்தல்

Lok-Sabha-To-Discuss-Triple-Talaq-Bill-Tomorrow--BJP-Issues-Whip-To-MPs

திருத்தங்களுடன் கூடிய புதிய முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நாளை விவாதத்திற்கு வருகிறது. இந்த விவாதத்தில் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென்று பாஜக அறிவுறுத்தியுள்ளது.


Advertisement

‘முத்தலாக்’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’வை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. மசோதா கொண்டு வந்தது முதலே சர்ச்சை வெடித்தது. இந்த மசோதாவின்படி, ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியும். 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். விவாகரத்து என்பது சிவில் பிரிவில் வருகிறது. இதனால் அதனை கிரிமினல் குற்றத்தில் ஏன் கொண்டுவர வேண்டும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், கணவர் மூன்று ஆண்டுகள் சிறைக்கு செல்லும் பட்சத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்றும் பலர் விமர்சித்தனர். 

  


Advertisement

முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது மக்களவையில் மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் போதிய எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லாததால் இந்த மசோதா அங்கு முடங்கி விட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்து மசோதாவை முடக்கியது.

பின்னர், 3 முக்கிய திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் மாதம் புதிய முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. குற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டிடம் சென்று ஜாமீன் பெறலாம் என திருத்தம் செய்யப்பட்டது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. எந்தவொரு அவசரச் சட்டத்திற்குள் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். 

   


Advertisement

அதனால், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதாவுக்கு இரு அவையிலும் ஒப்புதல் பெற பாஜக முயற்சிக்கும். திருத்தங்களுடன் கூடிய முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா நாளை மக்களவையில் விவாதத்திற்கு வருகிறது. இந்த விவாதத்தில் தங்கள் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று பாஜக கொறடா அறிவுறுத்தியுள்ளார். அதனையும் மீறி அவைக்கு வரவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. 

இதனிடையே, முத்தலாக் மசோதா குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே கூறியுள்ளார். இதனால், திருத்தங்களுடன் கூடிய புதிய முத்தலாக் மசோதா மீது காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement
[X] Close