
இந்தியர்கள் வாழ்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, பலருக்கு அது வாழ்க்கை. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியாக இருந்தாலும் பெரும்பாலும் நாம் ரசிப்பதும் கொண்டாடுவதும் கிரிக்கெட்டாகத்தான் இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்துவது பிசிசிஐ எனும் அமைப்புதான். ஆம், 1928 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பிசிசிஐ, உலகளவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு முகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், மாநில கிரிக்கெட் சங்கங்களும் பிசிசிஐ-யுடன் இணைந்தே இருக்கிறது. பிசிசிஐ ஒரு தனியார் அமைப்பு அது எப்படி தேசிய அணியை தேர்வு செய்யலாம் என பல ஆண்டுகாலமாக சர்ச்சை நீடித்து வருகிறது. இப்போது மீண்டும் இதேபோன்றதொறு சர்ச்சை கிளம்பி சென்னை உயர்நீதிமன்றக் கதவுகளை தட்டியுள்ளது.
ஆம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்ற பெயரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த கீதாராணி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், “ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. ஆனால் அரசின் அங்கீகாரம் இல்லாமல் கிரிக்கெட்டை பிசிசிஐ நிர்வகிக்கிறது. எனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்ற பெயரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும், அரசு அமைப்பு என அறிவிக்க மறுத்து வரும் பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அத்துடன் பிரிட்டீஷ் ஆட்சி கால நட்சத்திர சின்னத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்துவது சின்னங்கள் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும், வீரர்கள் தேர்விலும் வெளிப்படைதன்மை இல்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய அரசு, பிசிசிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்படி போகும் முடிவு எப்படியாக இருக்கும் என்பதனை இப்போது அறிய முடியாது. ஆனால் பிசிசிஐ எப்படி உருவானது அதன் கதையை கொஞ்சம் பார்க்கலாம்.
கிழக்கிந்திய கம்பெனியின் வருகை !
கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்துகாரர்கள்தான். 18 ஆ ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஏற்படுத்திய வர்த்தக விரிவாக்கத்துடன் சேர்ந்து தாங்கள் விளையாடும் கிரிக்கெட்டையும் அறிமுகம் செய்தது. முதல் முதலில் ஆங்கில ராணுவ அதிகாரிகள் அணிக்கும், ஐரோப்பிய வர்த்தகர்கள் அணிக்கும் இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி 1751 ஆம் ஆண்டு நடந்தது. பின்பு 1848-ல் காலனிய ஆட்சியாளர்களுடன் வர்த்தகம் செய்த பார்சி வணிகர்கள் பார்சி கிரிக்கெட் அணியை உருவாக்கினார்கள். அதன் பின்பு பார்சி வர்த்தகர்களைத் தொடர்ந்து காலனிய ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாகி விட்டிருந்த இந்திய சமஸ்தானங்களின் மகாராஜாக்களும், ஆங்கிலக் கல்வி பயின்று அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார்கள்.
அப்போதுதான் 1907 இல் இந்துக்கள் கிரிக்கெட் அணியும், 1912 இல் முஸ்லீம்களின் கிரிக்கெட் அணியும் ஏற்படுத்தப்பட்டன. நவநகர் இளவரசர் ரஞ்சித் சிங், அவரது மருமகன் துலீப் சிங், பாட்டியாலா மகாராஜா, விஜயநகரத்தின் மகாராஜகுமார், லிம்டியின் இளவரசர் கியான்சிங்ஜி, போர்பந்தர் மகாராஜா போன்றவர்களும், கர்னல் சி கே நாயுடு போன்ற ராணுவ அதிகாரிகளும் கிரிக்கெட் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களை கவர தொடங்கினார்கள். இதில் ரஞ்சித் சிங் நினைவாகத்தான் இப்போதும் ரஞ்சி கோப்பை போட்டிகளை நடத்துகிறது பிசிசிஐ. பின்பு 1930-களில் ஆங்கிலோ இந்திய மற்றும் கிருத்துவ இந்தியர்களின் அணியும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டது.
அப்போது லண்டனிலிருந்து செயல்பட்ட கிரிக்கெட் குழுமத்தில் (அப்போதைய ஐசிசி) சேறுவதற்கு அகில இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்து, பஞ்சாப், பாட்டியாலா, ஐக்கிய மாகாணம், ராஜ்புத், ஆள்வார், போபால், பரோடா, கத்தியவார், மத்திய இந்தியா பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் ஒன்று கூடி 1928 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஏற்படுத்தினர். இந்த அமைப்புதான் இப்போது வரை இந்தியாவின் கிரிக்கெட் முகமாக இப்போதும் செயல்பட்டு வருகிறது.