Published : 18,Dec 2018 04:30 PM
அஜித்துடன் அமிதாப் நடிக்கிறாரா? - போனி கபூர் விளக்கம்

போனி கபூர் தயாரிப்பில் அஜித் மேலும் ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியில் வெளியான திரைப்படம் ‘பிங்க்’. இந்தப் படத்தினை தமிழில் ஸ்ரீதேதி ரீமேக் செய்து வருகிறார். படத்தை ‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.
‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவியுடன் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அப்போது தமிழில் தங்களின் கம்பெனிக்கு ஒரு படம் நடித்து தர வேண்டும் என நடிகை ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டுள்ளார். ஆகவே அதற்காக அஜித் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு, இந்தி படமான ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்யலாம் என்றும் யோசனை கூரியுள்ளார். ஆகவே அவரது விருப்பப்படி இந்தப் படம் இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அமிதாப் பச்சன் ஹிந்தியில் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளார்.
அஜித்தின் கால்ஷீட்டிற்காக தமிழ்த் தயாரிப்பாளர்கள் பல காத்துக் கொண்டிருக்கும்போது எப்படி போனி கபூர் கம்பெனிக்கு இவர் படம் பண்ண சம்மதித்தார் என்று பலரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி மூலம் போனி கபூர் தமிழில் முதன்முதலாக கால் பதித்துள்ளார். மேலும் இந்த கம்பெனி தென் இந்திய பட உலகில் பல படங்களைத் தயாரிக்க உள்ளது.
இந்தப் படம் முடிந்த உடன் மேலும் ஒரு படம் அஜித் நடித்து தருவதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் வினோத் பற்றி போனி கபூர் கூறுகையில், “வினோத் மிக திறமையான இயக்குநர். அவர் வேலைகள் சிறப்பாக உள்ளது. அவர் இப்படத்தின் கதையை தமிழ் திரை ரசிகர்களுக்கு தக்க வடிவமைத்திருக்கிறார். அஜித்தான் வினோத்தை சந்தித்து பேச சொன்னார். உடனே வினோத் மும்பை வந்து என்னை சந்தித்தார்” என்றவரிடம் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக தகவல் பரவுகிறதே என்று கேட்டதற்கு அவர், “இல்லை. அது உண்மை இல்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.