ட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்!

ட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்!
ட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்!

கருணாநிதி சிலை திறப்பை மையமாக வைத்து திமுக ஆதரவாளர்களும், பாஜக ஆதரவாளர்களும் அவரவர்களின் ஹேஸ்டேக்குகளை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் கருணாநிதி சிலை திறப்பு தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன. திமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிர்ப்பாகவும் ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

#StatueOfKalaignar என்ற ஹேஸ்டேக்கை இணைய திமுக ஆதரவாளர்கள் பெரியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக #GoBackSonia, #StatueOfCorruption ஆகிய ஹேஸ்டேக்குகளை இணைய பாஜக ஆதரவாளர்களும்,  காங்கிரஸ், திமுக எதிர்ப்பாளர்களும் இணைந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #StatueOfKalaignar என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்க, #GoBackSonia என்ற ஹேஸ்டேக் இரண்டாமிடத்தில் உள்ளது. சிறிது நேரம் #GoBackSonia ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்திலும் வந்தது.

அனைத்து தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் இருக்கும் நிலையில் கருணாநிதியின் சிலை திறப்புக்கு புதிய ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னதாக ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்து பரப்பினர். அதற்கு பதிலளித்த திமுக ஆதரவாளர்கள் கருணாநிதியின் சிலை திறப்புக்கு ஆதரவாக ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டு செய்யப்படும் என்று தெரிவித்தனர். அதன்படியே இன்று காலை முதல் இரு தரப்பும் தங்களது ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் காவிரி விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்நேரத்தில் தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கருப்பு கொடி காட்டினர். சமூக வலைதளமான டிவிட்டரில் #GoBackModi  என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஒரு நாட்டின் பிரதமருக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியது. இது பாஜகவினரை கொந்தளிப்பாக்கியது. 

அதுமட்டுமின்றி ஜூலையில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு எதிராகவும் எதிர்ப்பு ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டது. #GoBackAmitshah என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த விவகாரங்களே இன்றைய இணைய ஹேஸ்டேக் போரில் எதிரொளிப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com