Published : 15,Dec 2018 01:59 AM

இலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..?

Ranil-Wickramasinghe-sworn-as-Sri-Lanka-PM-today-

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமிக்க அதிபர் சிறிசேன ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சவை பிரதமராக அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்த நாள் முதல் இலங்கை அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்த போது, நாடாளுமன்றத்தை சிறிசேன அதிரடியாக கலைத்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. அதிபர் சிறிசேன தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக அவரது மகன் நமல் ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமிக்க அதிபர் சிறிசேன ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை காலை 10 மணிக்கு ரணில் பிரதமராக பதவியேற்பார் என வானொலி ஒன்றுக்கு ஐக்கிய தேசிய கட்சி எம்பி ரஜித சேனரத்ன தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என சிறிசேன நேற்று காலை கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை ரணிலுடன் தொலைபேசியில் பேசிய பின்பு அவரை மீண்டும் பிரதமராக்கும் முடிவுக்கு சிறிசேன வந்ததாக தெரிகிறது. எனவே இலங்கையில் மீண்டும் பழைய சூழல் திரும்பியுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்