Published : 10,Dec 2018 12:44 PM
விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி புகாரில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி புகாரில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா அரசின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூட்டுக்குழு ஒன்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதனிடையே இந்தியாவின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தும் வாரண்ட் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மல்லையா பிணையில் வெளியில் உள்ளார். தமக்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தாம் திரும்ப செலுத்தவில்லை என கூறப்படும் கடன்கள் தமது விமான நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதற்காக வாங்கப்பட்டது என்றும் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். தாம் தனிப்பட்ட முறையில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை என்றும் அவர் சமீபத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கடன் தொகையை முழுமையாக திருப்பித் தர தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் பதிவில் அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.