
எந்த வித பிரச்னைகளாக இருந்தாலும் விவாதிக்க தயாராக இருப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டுமென்றும் கூறி அனைத்து கட்சி கூட்டத்தை இன்று கூட்டினார்.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய மோடி எந்தவித பிரச்னைகளாக இருந்தாலும் விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வரும் குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் என்றும் நம்புகிறேன். எதிர்க்கட்சிகளிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல பிரச்னைகளை கையில் எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் பேசிய மாநிலங்களைவையின் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய பிரச்னைகளுக்கு எதிராக குரலெழுப்பப்படும் என்று தெரிவித்தார். ரபேல் ஊழல் குறித்து முக்கியமாக விவாதம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.