Published : 10,Dec 2018 10:02 AM

தெலுங்கானாவில் மாறும் அரசியல் கூட்டணிகள் - சந்திரசேகர் ராவுக்கு பாஜக அழைப்பு

After-Exit-Polls--KCR-s-Party-Scoffs-At-BJP-Advances-In-Telangana

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை மொத்தமாக  நடைபெறவுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை பொருத்தவரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே பல முடிவுகள் தெரிவித்தன. இருப்பினும், சில கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கூட்டணி மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு இடையே இழுபறி இருக்க வாய்ப்புள்ளதாக கூறின. 

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தெலுங்கானா அரசியல் களத்தில் அதிரடியாக அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருகின்றன. தனித்து போட்டியிட்ட பாஜக தற்போது, காங்கிரஸ் மற்றும் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் அல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கான நேரடியான அழைப்பாகவே இது பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து தெலுங்கானா பாஜக தலைவர் கே.லஷ்மன் கூறுகையில், “பாஜக ஆதரவு அல்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது. டி.ஆர்.எஸ் தன்னுடைய நிலைப்பாட்டை இப்போது தெரிவிக்க வேண்டும். ஓவைசி கட்சியுடன் டிஆர்எஸ் இருந்தால், பாஜக அக்கட்சிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ், மஜ்லிஸ் அல்லாத கட்சிகளுக்கு பாஜக ஆதரவு அளிக்கும். இறுதி முடிவு அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியால் எடுக்கப்படும். எந்தக் கட்சிக்கும் இந்தத் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காது” என்றார். 

டிஆர்எஸ் பாஜகவின் பி டீம் என்று காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், பாஜக இப்படியான ஒரு கருத்தினை முன் வைத்துள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிய இன்று மாலை சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளார். ஏற்கனவே ஓவைசியிடன் சந்திரசேகர் ராவ் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டணி அமைப்பது குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 

தெலுங்கானா சட்டசபையில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. 60 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். 2014 தேர்தலில் ஆளும் தெலுங்கானா  ராஷ்டிரிய சமிதி 90 இடங்களை பிடித்து மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 13 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

ஓவைசி கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜக 5, தெலுங்குதேசம் 3, மார்க்சிஸ்ட் 1 இடங்களை பிடித்திருந்தது. இந்த முறை தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதால் சந்திரசேகர் ராவுக்கு நெருக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்