
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் முதல் நாளில் 9 விக்கெட்டுக்கு 250 எடுத்திருந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் அதிகப்பட்சமாக 123 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 37 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹசல்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே முகமது ஷமியின் விக்கெட்டை சாய்த்தார் ஹசல்வுட். இதையடுத்து 250 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது ஆஸ்திரேலியா. அஸ்வின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
87 ரன்னிற்கு 4 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. அப்போது, ஹண்ட்ஸ்கோம், ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹண்ட்ஸ்கோம் 34 ரன்னில் ஆட்டமிழந்த போதும், ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆட்டநேர இறுதியில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஹெட் 61 ரன்களுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்கள் சாய்த்தார். இஷாந்த் சர்மா, பும்ரா தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அஸ்வினை சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அஸ்வின் எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவர். ஆஸ்திரேலிய அணியின் ஆஃப் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயனிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டுள்ளார். கேப்டன் விராட் கோலி எதிர்பார்த்ததை விட அஸ்வின் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என்றார்.