Published : 05,Dec 2018 05:16 AM

முதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார்? 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

India-vs-Australia--Team-India-name-12-member-squad-for-1st-Test

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி அடிலெய்டில் நாளை  தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் 1947 ஆம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, ஒரு முறை கூட தொடரை வென்றதில்லை. தற்போது அந்த அணியில் முன்னணி வீரர்கள் இல்லை என்பதால் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். 2014-15 ஆம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் 4 சதங்கள் உள்பட 692 ரன்கள் குவித்திருந்தார். அதனால் அவர்தான், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் தெரிகிறார். அவரை விரைவில் ஆட்டமிழக்க செய்ய அந்த அணி வீரர்கள் திட்டம் வகுத்துள்ளனர். இந்திய அணியின் இளம் வீரர், பிருத்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் முதலாவது டெஸ்டில் அவர் இல்லை.

முரளி விஜயும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். புஜாரா, துணை கேப்டன் ரஹானே, விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது. பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வின் ஆகிய இந்திய வீச்சாளர்களும் ஆஸியை மிரட்ட வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் இந்திய அணியை வென்று அந்த தோல்விகளால் இழந்த பெருமையை மீட்க நினைக்கிறது. இதற்காக இந்திய அணியை வீழ்த்த புதிய திட்டங்களை வகுத்துள்ளது. அதோடு சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா சிறப்பாக செயல்படுவார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், சிடில் உள்ளிட்டோர் மிரட்டுவார்கள்.

இதற்கிடையே நாளை நடைபெறும் போட்டிக்கான 12 பேர் கொண்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய்,  புஜாரா, ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா. 

போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்