
செயற்கை மழையால் தாமரையை மலர வைப்போம் என்ற பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்துக்கு, தாமரை மலர சூரிய சக்தி வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பாஜக மற்றும் காங்கிரஸ் தங்கள் கூட்டணிகளை மும்முரமாக அமைத்து வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை திமுக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக களம் காணும் எனக் கூறப்படுகிறது. இதனால் பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து இன்று திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் தண்ணீரே இல்லை. புல் கூட முளைக்காத நிலையில், தாமரை எப்படி மலரும்” என்று விமர்சித்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த தமிழிசை, “இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து, தாமரை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு தற்போது ட்விட்டரில் பதில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், “சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை!
சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!” என விமர்சித்துள்ளார். இதனால் பாஜக-திமுக இடையேயான அரசியல் கருத்து மோதல் வெடித்துள்ளது.