Published : 04,Dec 2018 06:51 AM

போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலையில் 4 பேர் கைது: 87 பேர் வழக்கு!

3-arrested-for-Bulandshahr-cop-killing--FIRs-filed-against-87-for-rioting

உத்தரபிரதேசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள மஹவ் கிராமத்தின் வயல்வெளியில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்தன. இதைக் கண்டு பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கிராமத்தினரும் ஆத்திரமடைந்து, பசுவைக் கொன்றவர்களை கைது செய்யக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த உடல்களை கொண்டு வந்து தேசிய நெடுஞ்சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சமாதானத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது. அங்கிருந்த சில போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். வாகங்களுக்கு தீ வைத்தனர். வன்முறையை கட்டுப்படுத்த தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டார்.  போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டதில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் துப்பாக்கியையும் அவர்கள் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது. இதேபோல துப்பாக்கிச் சூட்டில் அப்பகுதியை சேர்ந்த சுமித் என்ற இளைஞரும் உயிரிழந்துள்ளார். இதுதவிர சில போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த சுபோத் குமார் சிங்கின் குடும்பத்திருந்து ரூபாய் 40 லட்சம் நிவாரணமும், சுமித் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுபோத் குமார் சிங்கின் கார் டிரைவர் ராம் அஸ்ரே கூறும்போது, “ஆபத்தான நிலையில் இருந்த சுபோத் குமாரை மருத்துவமனைக் கு ஜீப்பில் அழைத்துச் சென்றேன். ஒரு கும்பல் திடீரென்று வழிமறித்து கற்களால் தாக்கியது. அதோடு,அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து குண்டுகளும் பறந்து வந்தன. இதனால் என் உயிரை காக்க ஒடிவிட்டேன். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது. கூடுதல் போலீசாரோடு வந்து பார்த்தபோது இன்ஸ்பெக்டர் இறந்திருந்தார்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொன்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஜ்ரங் தளின் அமைப்பாளர் யோகேஷ் ராஜ் உட்பட 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்