Published : 01,Dec 2018 02:25 AM
’ராகுல்காந்தி என் கேப்டன், அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்’: சித்து

’காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என் கேப்டன், அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்’ என்று பஞ்சாப் அமைச்சர் சித்து தெரிவித்துள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் சமாதி பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் உள்ளது. அங்கிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் கோயிலுக்கு சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அவர்கள் செல்வதற்காக இந்தியா-பாகிஸ்தான் பகுதிக ளில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் நடந்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடிக்கல் நாட்டினார். இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்றனர். அப்போது காலிஸ்தான் ஆதரவு தலைவருடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் அவர் பாகிஸ்தான் சென்றதும் சர்ச்சையானது. இதை பாஜக கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், ராகுல் காந்திதான் என்னை அங்கு அனுப்பினார் என்று சித்து தெரிவித்தார். இது சர்ச்சையை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் தடுத்தும் தனிப்பட்டை முறையில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார் என்றும் பஞ்சாப்பில் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் அங்கு பயணம் மேற்கொண்டது தவறு என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஐதராபாத் வந்த சித்து கூறும்போது, “ராகுல் காந்திதான் என் கேப்டன். அவர்தான் பாகிஸ்தானுக்கு என்னை அனுப்பினார். பஞ்சாப் முதலமைச்சர் என் தந்தை போன்றவர். அவரிடம், ’நான் பாகிஸ்தான் வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டேன், அதனால் செல்கிறேன்’ என்று தெரிவித்துவிட்டுதான் சென்றேன்” என்று கூறியுள்ளார்.