Published : 30,Nov 2018 11:37 AM
“விவசாயிகள் கேட்பது உரிமையை; உதவியை அல்ல” - ராகுல் பேச்சு

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியில் காங்கிரஸ்
தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார்.
நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு
அழைப்பின் பேரில் விவசாயிகள் டெல்லியில் திரண்டனர். பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்தப் பேரணியில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர். கோரிக்கைகளை
மத்திய அரசுக்கு எடுத்துரைக்கும் விதமாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச்
சென்றனர்.
கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் இதனை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தின்
சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக விவசாய
நிலங்களை கையகப்படுத்தும் போது வழங்கப்படும் தொகையைப் போல் கஜா புயலால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட
வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில், சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவர், பரூக் அப்துல்லா மற்றும் சரத் யாதவ்
உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசுகையில், “குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, போனஸ் உள்ளிட்ட வாக்குறுதிகளை
விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அளித்தார். ஆனால், தற்போதைய நிலை என்ன. இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.
வெறும் வெற்று வார்த்தைகளையே கூறி வந்திருக்கிறார். எதுவும் நடக்கவில்லை. விவசாயிகள் தங்களது உரிமைகளை கேட்கிறார்கள்.
உதவியை அல்ல.
நாடு இரண்டு வகையான பிரச்னைகளை சந்தித்துள்ளது. ஒன்று, வேலைவாய்ப்பின்மை, மற்றொன்று விவசாயிகள் பிரச்னை. கடந்த 4
ஆண்டுகளில் 15 தொழிலதிபர்களின் ரூ3.5 லட்சம் கோடி கடன்களை பிரதமர் மோடி அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது.
தொழிலதிபர்களின் கடன்கள் ரத்து செய்ய முடியும் என்றால், விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும்.
விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போது துணை நிற்கும். எதற்காகவும் பயப்படாதீர்கள். ” என்று கூறினார்.
Arvind Kejriwal at farmers’ protest in Delhi: Five months are left, I demand that the Central Govt implement Swaminathan report. Warna 2019 mein ye kisaan qayamat dha denge pic.twitter.com/wkTyPJgA1n
— ANI (@ANI) November 30, 2018
அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “5 மாதாங்கள் கடந்துவிட்டது, சுவாமிநாதன் கமிட்டி அளித்த அறிக்கையை
அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், நாட்டில் விவசாயிகள் மாபெரும் புரட்சியில்
ஈடுபடுவார்கள்” என்று எச்சரித்தார்.