Published : 28,Nov 2018 06:35 AM

ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்... திமுக அறிவிப்பு

DMK-conduct-all-party-meeting-tomorrow

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அதில், மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்ட நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக விவசாயத்திற்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ள நிலையில் அதில் எந்தெந்த கட்சிகள் பங்குபெறும் என அறிவிக்கப்படவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்