Published : 23,Nov 2018 02:47 AM
சபரிமலையில் தடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் : குமரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம்

சபரிமலை சென்றபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தை கண்டித்து, இன்று கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
நாகர்கோவிலில் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சபரிமலை சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, நிலக்கல் பகுதியில் வைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். அப்போது அமைச்சரை எஸ்.பி. அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, களியக்காவிளையில் கேரள அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் எல்லை பகுதியுடன் நிறுத்தப்பட்டன. அத்துடன் சபரிமலை தரிசனம் முடித்து திரும்பி வரும் வழியில், பம்பையில் இருந்து காட்டுபகுதி வழியாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்து கொண்டு இருக்கும் போதும், அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த இரு சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரியில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கேரள காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று கேரள காவல்துறையை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.