Published : 21,Nov 2018 02:03 AM

உயிரோடு ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி!

Investigating-the-murder-of-couple-from-Hosur-were-killed-for-honour

ஆணவக்கொலை செய்யப்பட்ட ஓசூர் காதல் தம்பதி உயிருடன் ஆற்றில் மூழ்கடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. பெற்றத் தந்தையே மகளை சரமாரியாக அடித்து உதைத்து கைகால்களை கட்டி ஆற்றில் தூக்கிப் போட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஷும் சுவாதியும் காதலர்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த நந்தீஷை சுவாதி திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. விளைவு, வீட்டை விட்டு வெளியேறி காதலரை கைபிடித்தார் சுவாதி. சூளகிரியில் வசித்து வந்த இருவரும் திடீரென மாயமானார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால் நந்தீஷின் சகோதரர் காவல்துறையிடம் புகார் அளித்தார். தம்பதியை தேடிய காவல்துறைக்கு அவர்களின் உயிரற்ற உடல் மட்டுமே கிடைத்தது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பெலக்வாடியில் உள்ள காவிரி ஆற்றில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. 

இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக காவல்துறை சுவாதியின் தந்தை சீனிவாசன், உறவினர்கள் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தது. விசாரணையில் சீனிவாசன் உள்ளிட்டோர் நந்தீஷ் - சுவாதி தம்பதியை காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. சீனிவாசன் உள்பட 7 பேர் கோயிலுக்குச் செல்லலாம் எனக்கூறி தம்பதியை கடத்திச் சென்றதாக தெரிகிறது. காரில் வைத்தே இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஓசூரில் கொலை செய்தால் தெரிந்துவிடும் என்பதால் முன்பே தாங்கள் பார்த்து வைத்திருந்த இடமான பெலக்வாடிக்கு சுவாதி மற்றும் நந்தீஷை அழைத்துச்சென்று அவர்களின் கை கால்களை கட்டி உயிரோடு காவிரி ஆற்றில் தூக்கிப் போட்டு இருவரையும் சீனிவாசன் கொலை செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கொலை நடந்த போது சுவாதி கருவுற்றிருக்கவில்லை என்பதும், அவரது தலைமுடி வெட்டப்படவில்லை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிடிபட்டுள்ள அஸ்வதப்பா, வெங்கட்ராஜ் மற்றும் லட்சுமணன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சுவாதியின் உறவினர்கள். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் கார் ஓட்டுநர் சுவாமிநாதனை காவலர்கள் தேடி வருகின்றனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்