
ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டாம் என்று வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு மூன்று டி20 தொடர், 4 டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்தில் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள, முரளி விஜய், ரஹானே, பார்த்திவ் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக பங்கேற்றுள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சுழல்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர், ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இவர்கள் இந்தப் போட்டியில் அடுத்த தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
’இஷாந்த் சர்மாவும் அஸ்வினும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்கும் வரை அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதால் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். முகமது ஷமி இன்னும் சில போட்டிகளில் விளையாட பயிற்சி பெற வேண்டும் என்பதால் அவரை ஆட சொல்லியிருக்கிறோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஞ்சி போட்டியில் மேற்கு வங்க அணிக்காக அடி வரும் முகமது ஷமியை, 15 ஓவர்களுக்கு மேல் வீச வேண்டாம் என்று பிசிசிஐ ஏற்கனவே கேட்டுக்கொண்டிருக்கிறது.