[X] Close

விமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..!

Man-Robbery-from-chennai-ATM-arrested

தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்து ஏ.டி.எம்.மில் வாடிக்கையாளரின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்குள் இருக்கும் 3 ஏ.டி.எம்-களை பயன்படுத்திய சிலரின் கணக்கில் இருந்து தொடர்ந்து பணம் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்திய காவல்துறையினர், குறிப்பிட்ட நபர் சம்பந்தப்பட்ட அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் இருப்பதைக் கண்டனர்.


Advertisement

இதனையடுத்து சென்ட்ரல் வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.களை ரயில்வே காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். சந்தேக வளையத்தில் சிக்கிய இளைஞர் ஏ.டி.எம்.-க்கு வந்தபோது அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட கோபி, தான் கையாண்ட உத்தியை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.


Advertisement

நாகரிகமாக உடையணிந்து கொண்டு இரண்டு ஏ.டி.எம். இயந்திரங்கள் இருக்கும் மையத்திற்குள் பணம் எடுப்பதுபோல் நின்று கொள்வார் கோபி கிருஷ்ணா. மற்றொரு இயந்திரத்தில் பணம் எடுக்க வருபவர் ஏ.டி.எம். கார்டை நுழைத்தவுடன் அதில் பணமில்லை இதில் எடுத்துக் கொள்ளுங்கள் என விட்டுக்கொடுப்பது போல் நடிப்பார். இதனை அறியாத வாடிக்கையாளர்கள் கோபி கிருஷ்ணாவுக்கு நன்றி கூறிவிட்டு மற்றொரு இயந்திரத்தில் பணம் எடுப்பார். அப்போது அவரது ரகசிய எண்ணை அறிந்து கொண்டு அவர் சென்றவுடன் ஏற்கனவே கார்டு நுழைக்கப்பட்ட ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்துக்கொண்டு கோபி கிருஷ்ணா தப்பிவிடுவார். விசாரணைக்குப்பின் கோபி கிருஷ்ணாவை பெரியமேடு காவல்துறையினரிடம் ரயில்வே காவல்துறையினர் ஒப்படைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close