Published : 09,Nov 2018 12:26 PM
இனி அதிமுகவினர் போராடமாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதால் இனி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர் முன் இருந்த விஜய் பேனர்களை கிழித்தனர். இதனிடையே, சர்ச்சை காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புதல் அளித்தனர். அதற்கான பணிகள் இன்று காலை நடைபெற்றது. நீக்கப்பட்ட காட்சிகளுடன் படத்தை தணிக்கை குழு பார்வையிட்டு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, பிற்பகல் முதல் ‘சர்கார்’ படம் மீண்டும் வழக்கம் போல் திரையரங்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படத்தில் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதால் இனி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கோவில்பட்டியில் உள்ள திரையரங்கில் ‘சர்கார்’ படம் பார்த்தேன். படம் பார்த்த போதுதான் அதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. அதன்பிறகுதான் பாடத்திலுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். எனக்கு பின் பல அமைச்சர்களும் வலியுறுத்தினார்கள். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் காட்சிகள் நீக்கப்படவில்லை.
படம் பார்த்த பின்பு நடிகர் விஜய்யை தொடர்புக் கொண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு கூறினேன். படக் குழுவினர் நீக்கவில்லை என்றால், அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன். காட்சிகளை நீக்க ஒருநாள் அவகாசம் கேட்டார்கள். ‘சர்கார்’ பட விநியோகஸ்தரிடம் பேசி தயாரிப்பு நிறுவனம் மூலம் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் இயற்பெயரை படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்திற்கு வைத்ததுதான் பிரச்னைக்கு காரணம். அதேபோல், இலவச டிவி போன்ற பொருட்களை விட்டுவிட்டு மிக்சி, கிரைண்டரை மட்டும் எரிப்பதுபோல் காட்சி இருந்ததால் தான் பிரச்னை ஆகியுள்ளது” என்றார்.