Published : 09,Nov 2018 08:09 AM
“அன்றே சொன்ன ரஜினி” - பரவும் ‘வள்ளி’ இலவச விமர்சனம்

வள்ளி என்ற திரைப்படத்தி நடிகர் ரஜினிகாந்த் கூறிய வசனம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக புகார் எழுந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு, விஜய்யின் பேனர்களை கிழித்தனர். அசம்பாவிதங்களை தடுக்க திரையரங்கில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் படம் மறு தணிக்கைக்கு சென்று சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் சர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்ததாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் முன் ஜாமீன் கோரியுள்ளார். இவ்வாறு சர்கார் சர்ச்சை செய்திகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், மற்றொரு புறம் விஜய் ரசிகர்கள் சர்காருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ‘வள்ளி’ திரைப்படத்தில் கூறிய வசனம் ஒன்று பரவி வருகிறது. ‘வள்ளி’ படத்தில் ‘வேலை வெட்டி கேளுங்க.. சேலை வேட்டி தானாக வரும்” என ஒரு வசனத்தை ரஜினி பேசியிருப்பார். இந்த வசனம் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு எதிராக அமைந்திருக்கும். இந்த வசனத்தை தற்போது பகிரும் ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், அப்போது சொன்ன ரஜினி என்று பதிவிட்டு வருகின்றனர்.