
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பழங்குடி கிராம பள்ளி குழந்தைகளுடன், கல்லூரி மாணவர்கள் சேர்ந்து பசுமை தீபாவளியை கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகை என்றதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். ஆனால், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற விமர்சனங்களால் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பட்டாசு வெடிப்பதையும் கடந்து இயற்கையோடு 'பசுமை தீபாவளி' என்ற பெயரில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை கையில் எடுத்துள்ளனர் கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள்.
ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தில் பள்ளி குழந்தைகளை ஒருங்கிணைத்து இயற்கையின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரி மாணவர்கள் தீபாவளியை கொண்டாடினர். மேலும், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தியும், அவர்களுடன் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் மூலம் சிறுவயதிலேயே பசுமை குறித்து அறிந்துகொள்ள சிறுவர்களுக்கு உதவும் என்கின்றனர் கல்லூரி மாணவர்கள்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் இல்லாவிட்டாலும் வண்ண வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி பசுமையை காக்கும் பொருட்டு கொண்டாடியதாக தெரிவிக்கின்றனர்.