Published : 04,Nov 2018 03:23 AM

பிரீத்தி ஜிந்தாவுடன் மோதல்: பஞ்சாப் அணியில் இருந்து விலகினார் சேவாக்!

Sehwag-parts-ways-with-Kings-XI-Punjab

கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழக வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான அஸ்வின் இருக்கிறார். இந்த அணிக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, தொழிலதிபர் மோகித் பர்மன் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர். இந்த அணியின் வீரராக களமிறங்கிய வீரேந்திர சேவாக், அந்த அணியின் ஆலோசகராகச் செயல்பட்டார். வீரர்கள் ஏலத்தில் இருந்து அணியை வழிநடத்துவது வரை அவரது பங்கு இருந்தது.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, பஞ்சாப் அணி எதிர்கொண்டது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 159 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மட்டுமே கடைசி வரை நின்று 95 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்றது.

இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் அவுட்டானதும் கேப்டன் அஸ்வின் மூன்றாவது வீரராக களமிறங்கி டக் அவுட் ஆனார். போட்டி முடிந்ததும், கருண் நாயர், மனோஜ் திவாரி ஆகியோரை விட்டுவிட்டு, அஸ்வினை எப்படி அந்த வரிசையில் இறக்கலாம் என்று சேவாக்கிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டார் பிரீத்தி. இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இதை நேரில் பார்த்தவர்கள், ‘ஆடும் லெவனை தேர்ந்தெடுப்பதில் சேவாக்கை அடிக்கடி குறை கூறுவார் பிரீத்தி. இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்படுவது சகஜம். இது முதல் முறையல்ல’ என்றனர்.

அணியின் மற்ற உரிமையாளர்களிடம், ’கிரிக்கெட் பற்றி பிரீத்தி என்னிடம் எதுவும் கேட்கக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டார் சேவாக். பிரீத்தி ஜிந்தா தொடர்ந்து இப்படி நடந்துகொள்வதால் பஞ்சாப் அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து சேவாக் விலகுவார் என்று கூறப்பட்டது.

இதை அப்போது மறுத்த பிரீத்தி ஜிந்தா, ‘எனக்கும் சேவாக்கிற்கும் மோதல் போக்கு இல்லை. தவறான தகவலை எழுதி என்னை வில்லியாக சித்தரிக்க வேண்டாம்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து விலகுவதாக சேவாக் நேற்று அறிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‘எந்த ஒரு நல்ல விஷயமும் என்றாவது ஒரு நாள் முடிவுக்கு வரும். பஞ்சாப் அணியுடனான எனது தொடர்பும் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அணியின் இரண் டு தொடரில் வீரராகவும் 3 தொடரில் ஆலோசகராகவும் பணியாற்றினேன். அந்த அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்