Published : 03,Nov 2018 05:57 AM

தீபாவளி : மத்தாப்பு, புஸ்வாணம் வெடிக்க கட்டுப்பாடில்லை!

Not-timing-for-Certain-FireCrackers-bursting-on-Diwali

தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் மத்தாப்பு, புஸ்வாணம், ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு இல்லை தீயணைப்புத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அவகாசத்தை தளர்த்தக் கோரி தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்கவேண்டும், அதற்கு மேல் வெடிக்கக் கூடாது என்பதில் நீதிமன்றம் தீவிரமாக உள்ளது. அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம்’ என்று உத்தரவிட்டது. 

இதனையடுத்து பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது. அதில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்புத்துறை தலைமை அலுவலகத்தில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்ப‌த்துறை டிஜிபி மகேந்திரன், பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். 

பின் சத்தமாக வெடிக்கும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை இருப்பதாகவும், மத்தாப்பு, புஸ்வாணம் உள்ளிட்டவற்றை வெடிக்க தடை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தரையில் இருந்து மேலே சென்று வெடிக்கக்கூடிய ராக்கெட் வகை பட்டாசுகளுக்கு கட்டுப்பாடு இல்லை எனவும் மகேந்திரன் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்