Published : 29,Oct 2018 03:49 AM
மோசமான வானிலை காரணமாக விமான விபத்து: 189 பேர் பரிதாப பலி?

இந்தோனேஷிய விமான விபத்தில், அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.
வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதாவது 6.33 மணிக்கே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப் பட்டது. விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்கிற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், இந்த விமானத்தில் 210 பேர் பயணம் செய்யலாம்.
(தொடர்பு துண்டிக்கப்பட்ட இடம்...)
இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது உறுதியானது. அதில் 189 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. உடைந்த விமான பாகங்கள் கடலில் மிதப்பதாகவும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் சிறிது நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற இருக்கிறது என்றும் அதில் இன்னும் சில தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று இந்த பட்ஜெட் விமானத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.