
இந்தியாவின் நண்பனாக ஆயுள் காலத்துக்கும் நீடிப்பேன் என ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் வருகையை ஒட்டி "இந்தியாவின் நண்பனாக ஆயுள் காலத்துக்கும் நீடிப்பேன்" என ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் ஜப்பானின் வரலாற்று ரீதியான நெருக்கத்தையும் ஷின்ஜோ ஆபே தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றத்தில் 2007 ம் ஆண்டு பேசும் வாய்ப்பு கிடைத்ததையும் ஆபே பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அகமதாபாத்துக்கு தான் சென்றபோது கிடைத்த வரவேற்பிலும் உபசரிப்பிலும் மிகவும் மகிழ்ந்ததாகவும் அதேபோன்ற மகிழ்ச்சி ஜப்பானில் மோடிக்கு கிடைக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மோடி தனது நம்பத்தகுந்த, மதிப்புமிக்க நண்பர் எனவும் அபே குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் ஜப்பான் பிரதமரை சந்தித்த மோடி, அவருக்கு ரோஸ் குவார்ட்ஸ் கற்களால் ஆன கிண்ணங்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற வட இந்திய கலைபொருட்களை பரிசாக வழங்கினார்.