Published : 27,Oct 2018 01:22 PM

“என்னை விசாரிக்காமல் தூக்கில் போடுவீர்களா?” - கொந்தளிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

AR-Murugadoss-Hits-Back-with-Proof-of-Sarkar-Story-Issue-in-detail

தன்னுடைய கதையை படிக்காமல், படத்தையும் பார்க்காமல் பாக்யராஜ் எப்படி இப்படியொரு முடிவுக்கு வந்தார் என்று இயக்குநர் முருகதாஸ் விமர்சித்துள்ளார்.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையயொட்டி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதையும் தன்னுடைய ‘செங்கோல்’ என்ற கதையும் ஒன்றுதான் என்று வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் சமரச முயற்சிகள் நடந்தன. ஆனால், அங்கு தீர்வு எட்டாத நிலையில் நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. 

       

இதற்கிடையில், இரண்டு கதையும் ஒன்றுதான் என்பது போல், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் வருணுக்கு எழுதப்பட்ட கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் அளித்த பேட்டியில், “புகார் வந்த பின்னர் இருதரப்பினரையும் விசாரித்தோம். முருகதாஸிடம் அவருடைய கதையை கேட்டோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்ததில் கதையின் முக்கியமான கரு ஒன்றாகவே இருந்தது. அதனால், இதனை பேசி முடிக்கவே முடிவு செய்தோம். ஆனால், முருகதாஸ் அதற்கு மறுத்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.

    

இந்நிலையில், ‘சர்கார்’ பட கதை விவகாரம் தொடர்பாக இணையதள சேனலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விரிவான தன்னிலை விளக்கத்தை அளித்துள்ளார். இதில், பாக்யராஜை நோக்கி  சரமாரியாக கேள்விகளை முன் வைத்துள்ளார்.

முருகதாஸ் தனது பேட்டியில் கூறியிருப்பது:-

விஜய் படம் என்றாலே பிரச்னைதான்?

ஒவ்வொரு முறையும் படம் பண்ணும் போது பிரச்னை வருகிறது என்பதை விட, விஜய் உடன் படம் பண்ணும் போது பிரச்னை வருகிறது என்றே சொல்ல வேண்டும். இது எனக்கு மட்டும் கிடையாது. விஜய் உடன் எந்த இயக்குநர் படம் பண்ணினாலும் இந்தப் பிரச்னை வருகிறது. மிகப்பெரிய நடிகரின் படம் என்பதால் இதனை தொட்டு பெயர் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. விஜய் மீது இருக்கும் ஏதோ ஒரு பிரச்னை அவரது படங்கள் மீது வெளிப்படுகிறது. 

      

என்னுடைய கதையை பாக்யராஜ் படித்தாரா?

இந்த விஷயம் மிகவும் ஒருதலைபட்சமாக உள்ளது. இரண்டு கதையும் ஒன்று என்றால், என் கதையை படித்தார்களா?. அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா? இல்லையா?. என்னுடைய பவுண்டடு ஸ்கிரிப்டை நான் இதுவரை அவர்களிடம் கொடுக்கவே இல்லை. மூலக் கதைக்கான ஸ்கிரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள். ஒன்று என்னுடைய முழுத் திரைக்கதையையும் படிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் படத்தை பார்க்க வேண்டும். நான் படத்தை காட்டுவதாக சொன்னேன். ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. வெறும் சினாப்சிஸ் கதையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்து சொல்வது எவ்வளவு பெரிய தவறு. எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறீர்கள். 

முதல்வரின் மறைவு, கூகுள் சிஇஓ பற்றி எனத் தற்காலத்தில் நடக்கக் கூடியதை வைத்து நான் படம் எடுத்திருக்கும் நிலையில், 2007 இல் பதிவு செய்யப்பட்டுள்ள கதையும் இதுவும் எப்படி ஒன்றாகும். நேர்மையாக பணியாற்றிய எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை. 

ஸ்டில்ஸ் விஜய்யை அழைத்து ஏன் விசாரிக்க வில்லை?

           

‘செங்கோல்’ கதை எழுதிய வருண் என்பவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. அவர் எப்படி இருப்பார், என்ன வயது என்ற  எந்த விவரமும் எனக்கு தெரியாது. இதனை அவரும் ஒப்புக்கொள்வார். வருண் தனது நண்பர் சூரிய கிரணிடம் கதை சொல்லியதாகவும், சூரிய கிரண் என்னுடைய படங்களில் பணியாற்றிய ஸ்டில்ஸ் விஜய் என்பவரிடம் அந்தக் கதையை கூறியதாகவும், அவர் மூலம் எனக்கு கதை வந்ததாகவும் சொல்கிறார். ஸ்டில்ஸ் விஜய் என்பவர் மூலம் தான் கதை என்னிடம் வந்தது என்றால், அவரை நேரில் அழைத்து விசாரித்தார்களா?. போனில் அழைத்து பேசியதாக கூறுகிறார்கள். போனில் பேசி எனக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிடுவீர்களா?. நேரில் அழைத்து பேச வேண்டாமா?. 

கதையாசிரியர்கள் குழு என்ன சொல்கிறது:-

13 பேர் கொண்ட கதையாசிரியர்கள் குழுவில் 5 பேர் இரண்டு கதையும் ஒன்று என்று கூறியுள்ளார்கள். 6 பேர் இரண்டும் வெவ்வேறான கதை என்று கூறியுள்ளனர். இருவர் நடுநிலையாக இருந்துவிட்டார்கள். அப்படியிருக்கையில், எப்படி பெரும்பான்மையானவர்கள் இரண்டு கதையும் ஒன்று என்ற முடிவுக்கு வந்ததாக பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை குழுவில் உள்ள மற்றவர்களின் ஒப்புதலுடன் வெளியானதா?. இரண்டு கதையும் ஒன்று என்று சொன்னவர்கள் யார் என்று தெரிந்தால் அதில் ஒரு உண்மை புலப்படும். பாக்யராஜ் இந்த விவகாரத்தில் ஏன் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என்றே தெரியவில்லை. 

சின்னவீடு காப்பியா?

        

பாக்யராஜ் எழுதி இயக்கிய ‘சின்னவீடு’ படத்தின் கதையும், கலைமணி எழுதி மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் கதையும் கிட்டதட்ட ஒன்றேதான். ‘சின்ன வீடு’ படத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் வெளியானது. அப்படியானால் நீங்களும் காப்பி அடித்தீர்களா?. நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?. 

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்