Published : 18,Oct 2018 06:18 AM

எம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா ?

A-viral-meme-s-which-circulating-few-days-to-degrade-the-image-of-Former-CM-MGR

அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஏன் பண்டிகைகளைக் கூட விட்டு வைப்பதில்லை மீம் கிரியேட்டர்கள். சகட்டு மேனிக்கு கேலியும் கிண்டலும் செய்வார்கள், இதனை பெரும்பாலான மக்களும் ரசிக்கின்ற வகையிலேயே இருந்தது. மீம்ஸ் என்பது கருத்துரிமையின் மற்றொரு வடிவமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், நகைச்சுவைகளை வாரி வழங்குவதே மீம் கிரியேட்டர்களின் முக்கிய வேலையாகவே இருக்கிறது. மேலும், இப்போது வரும் மீம்கள் அனைத்தும் இப்போது உயிரோடு இருப்பவர்களை விமர்சித்தே வருவதால், மீம்களால் பாதிக்கப்பட்டவர்களும் இதுவும் ஒரு வகையான விளம்பரம் என்று எளிதாகவே கடந்து செல்கிறார்கள்.

ஆனால், அனைத்துக்கும் எல்லை என்று ஒன்று இருக்கிறது. அதுதான் அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாகிவிடும் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட நஞ்சைதான் கடந்த சில நாள்களாக மீம் கிரியேட்டர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.உயிரோடு இருக்கும் வரை ஒருவரை நாம் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அதில் தவறில்லை. அதில் கூட இருப்பவர்களின் உடல் குறையை சுட்டிக்காட்டி வரும் மீம்களை நல்ல மனம் படைத்தோர் ரசிக்கமாட்டார்கள். இதில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனின் தலைமுடி வைத்து மோசமாக மீம்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வந்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் குரலையும், பேச்சையும் வைத்து மீம்கள் வெளி வந்தன. இது அந்தக் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்போது இதுபோன்ற மோசமான தாக்குதலை நகைச்சுவை என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை வைத்து வெளி வந்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து இருமுறை முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சியை தொடங்கி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என்று இப்போதும் தமிழக மக்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அரசியலில் மட்டுமல்லாமல் திரைத் துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் என ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரர். இந்த மீம் கிரியேட்டர்களுக்கு அவரை பற்றி தெரியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் குரல் வளத்தை வைத்து தொடர்ந்து வெளியிடப்படும் மீம்ஸ் ஆபாசத்தின் உச்சமாகவும், மீம் கிரியேட்டர்களின் கொடூரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடிக்க வந்த புதிதில் அவர் குரல் நன்றாகத்தான் இருந்தது. ஒரே ஒரு சம்பவம் அவரின் குரல் வளத்தை பாதித்தது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும். அப்போது சில பிரச்சனைகள் இருந்தது. அப்போது திடீரென கோபமடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரின். வீட்டுக்கே சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவருமே சுட்டுக்கொண்டனர். ஆனால், அதில் இருக்கும் ஒரு குண்டு எம்.ஜி.ஆரின் கழுத்துப் பகுதியை துளைத்துச் சென்றது. இந்தச் சம்பவம் 1967 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி நடந்தது. இந்தச் விபத்துக்கு பின்புதான் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பு அவர் நடித்த படங்களில் பேசும் வசனங்களில் தெரிந்தது.

ஆனால், அவரின் இந்தக் குறையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போதைய அரசியல் தலைவர்கள் கூட அதை வைத்து விமர்சனம் செய்யவில்லை. இதற்கு காரணம் எம்.ஜி.ஆரை மக்கள் நேசித்தார்கள், இப்போதும் கூட தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதரை, அதுவும் இப்போது உயிரோடு இல்லாதவரை, அதையும்தாண்டி அவரின் குரல் வளத்தை கேலியும், கிண்டலும் செய்து மீம் தயாரிக்கிறார்கள். இந்த ட்ரெண்டை யார் உருவாக்கியது என தெரியவில்லை. ஆனால், இதை சாக்காக வைத்து மாற்றுக் கட்சிக்காரர்கள் இந்த மீம்களை ரசிப்பதும் ஷேர் செய்வதும், அவர்களே உருவாக்குவதும் இப்போது வைரலாகி வருகிறது.

இவை முகம் சுளிக்க வைப்பதாகவே இருக்கிறது. நல்ல மனநலம் படைத்தவர்கள் இதனை ரசிக்கமாட்டார்கள், ஷேர் செய்யமாட்டார்கள். இந்த நாட்டில் கருத்துரிமை விசாலமாகவே இருக்கிறது, அதனை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதிலேயே உள்ளது.மீம்களை தயாரிப்பவர்கள் தங்களது உடல்நலம் சார்ந்தோ மற்றோர் தரக்குறைவாக விமர்சிக்க அனுமதிப்பார்களா என சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியம் தற்போது எழுந்திருக்கிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்