நட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நண்பன்

நட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நண்பன்
நட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நண்பன்

சேலத்தில் பெண் மீது அமிலம் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் குகை என்னுமிடத்தில் பெண் மீது ஒருவர் அமிலம் வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். அலறித் துடித்த அந்தப் பெண்ணை அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதித்தனர். 40 விழுக்காடு காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண் மீது அமிலம் வீசித் தாக்குதல் நடத்தியது குகைப் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பது விசாரணையில் தெரி‌வந்துள்ளது. கூலித்தொழிலாளியான சீனிவாசனுக்கும் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கும் நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஓராண்டுக்கு முன் சீனிவாசன் உடனான நட்பை அந்தப் பெண் துண்டித்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்த அப்பெண் மீது அமிலத்தை வீசியதாக தெரிகிறது. தப்பியோடிய சீனிவாசன் மர அறுவை மில்லில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தவர். சேலம் குகை, செவ்வாய்ப்பேட்டையில் சாயப்பட்டறைகள் மற்றும் வெள்ளிப்பட்டறைகள் அதிகளவில் உள்ளன. இங்கு சில பணிகளுக்காக அமிலம் பயன்படுத்தப்படுகிறது. 

அங்கு பணிபுரியும் நண்பர்கள் மூலம் சீனிவாசன் அமிலத்தைப் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் அமில வீச்சுக்கு ஆளான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com