Published : 13,Oct 2018 08:04 AM
4 ரன்னில் அவுட்: கே.எல்.ராகுலை வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெறும் 4 ரன்னில் அவுட் ஆன, தொடக்க ஆட்டக் காரர் கே.எல்.ராகுலை சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்களும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 52 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. பிருத்வி ஷாவும் கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரர் களாக களமிறங்கினர். பிருத்வி ஷா அபாரமாக ஆடி, 53 பந்துகளில் ஒரு சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து வாரிகன் சுழலில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்த முறையும் வாய்ப்பைத் தவற விட்டார். அவர் வெறும் 4 ரன்னில் ஹோல்டர் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து வந்த புஜாராவும் 10 ரன்னில் கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் விராத் கோலியும் துணைக் கேப்டன் ரஹானேவும் ஆடி வருகின்றனர்.
இந்நிலையில் தனது வாய்ப்பை வீணடித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கே.எல்.ராகுலை கடுமையாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முதல் போட்டியில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். அணியில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று புகார் கூறி வரும் நிலையில், ராகுலின் ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
மோகன் என்ற ரசிகர், ‘இது கடவுள் கொடுத்த வாய்ப்பு, இதை வைத்து ராகுல் டிராவிட்டாக மாறுங்கள், கே.எல்.ராகுலாக அல்ல’ என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர், ‘பேட்டிங்கில் ராகுலுக்கு டெக்னிக்கல் பிரச்னை இருக்கிறது. துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் என்ன செய்கிறார்?’ என்று கேட்டுள்ளார்.
’கே.எல்.ராகுலை, விராத் கோலியும் கிரிக்கெட் நிர்வாகமும் நம்புவதை போல என்னை யாரும் நம்ப மறுக்கிறார்களே?’ என்று கிண்டலாக ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.
‘கே.எல்.ராகுல், 2018-ல் 10 டெஸ்ட் போட்டிகளில் 17 இன்னிங்ஸில் விளையாடி 387 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது ஆவரேஜ் 22.76. இந்திய அணியில் இப்படியொரு சரிவை பார்த்திருக்கிறோமா?’ என்று கேட்டுள்ளார் இன்னொரு ரசிகர். இன்னும் சில ரசிகர்கள் மோசமாக அவரை விமர்சித்து வருகின்றனர்.