Published : 13,Oct 2018 07:24 AM
இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார்!

பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி, மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91.
மத்திய பிரதேசத்தின் மைகார் நகரில், உஸ்தாத் பாபா அலாவுதீன் கான் மற்றும் மதீனா பேகம் தம்பதிக்கு 4வது மகளாக பிறந்தவர் இவர். ரோஷனரா கான் என்பது பெற்றோர் வைத்த பெயர். 4 வயதிலேயே இசை கற்கத் தொடங்கிய இவர், பின்னர் இந்த துறையில் பிரபலமானார். இவரின் இசை திறமையில் வியந்த மகாராஜா பிரிஜ்நாத், அவருக்கு அன்னபூர்ணா தேவி என பெயர் சூட்டினார். இந்துஸ்தானி இசையில் புலமை பெற்ற இவர் 14 வயதில், பிரபல சிதார் இசை கலைஞர் ரவிசங்கரை திருமணம் செய்துகொண்டார். . இவர்களுக்கு சுபேந்திரா சங்கர் என்ற மகன் இருந்தார். அவர் 1992-ல் மறைந்துவிட்டார். ரவிசங்கரிடம் விவாகரத்து பெற்ற அன்னப்பூர்ணா தேவி, பின்னர் ருஷிகுமார் பாண்டியா என்பவரை மணந்துகொண்டார்.
கடந்த சில வருடங்களாக முதுமை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த இவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த அன்னப்பூர்ணா தேவி, பத்ம பூஷண் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பிரபல இசைக்கலைஞரான உஸ்தாத் அலி அக்பர் கான், இவரது சகோதரர் ஆவார்.