
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படாது என்று திருவிதாங்கூர் தேவஸம் போர்டு அறிவித்துள்ளது.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவஸம் போர்டு தெரிவித்தது. இந்நிலையில் பெண்களை அனுமதிக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸம் போர்டின் தலைவர் பத்மகுமார் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கேரளா மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.