Published : 03,Oct 2018 01:33 PM

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹெச்.ராஜா  

H-Raja-case-adjourned-till-october-24

அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிப்பது பற்றிய விசாரணைக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று ஆஜராகவில்லை எனத் தெரியவந்துள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்து கொச்சையாக பேசியதாக ஹெச்.ராஜா மீது புதுக்கோட்டை, திருமயம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தை இழிவாக பேசிய ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஹெச்.ராஜா மீது வழக்கு தொடராமல் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

மேலும் அறிவுரை வழங்கிய நீதிமன்றம்,“ஹெச்.ராஜா மீது காவல்நிலையத்தில் புகார் அளியுங்கள். அவர் மீது தவறு இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அப்படி இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என மனுவாக தாக்கல் செய்யுங்கள். அந்த மனு மீது விசாரிக்கப்பட்டு முகாந்திரம் இருந்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தது.

நீதிமன்ற அறிவுரையின்படி த.பெ.தி.க. கண்ணதாசன், வழக்கறிஞர் சுதா ஆகியோர் நீதிமன்ற ஹெச்.ராஜா மீது அவமதிப்பு வழக்கு தொடர கோரி கடிதம் தந்திருந்தனர். அதன்படி அரசு தலைமை வழக்கறிஞர் முன் இன்று ஆஜராக வேண்டுமென்று என்ற நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் ரபு மனோகர் ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டார். இதனையடுத்து அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிப்பது பற்றிய விசாரணையை அக்.24க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்